

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சி களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்-வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.
சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்கிறார்.
தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதனையடுத்து தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது.
அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்ததாவது:-
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இன்று (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-
(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
(3) பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
(4) தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
(5) கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், நாளை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
(7) சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-
i. அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
ii. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும்
III. தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
iv. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.