ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3,274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 7 மாதங்களாகும் நிலையில், இன்று வரை அதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஏழை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் வகையில் ஆள்தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அரசு தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக்கழகம் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் 6 கோட்டங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களாக நியமிப்பதற்காக 3274 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வி்ண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. ஆனால், எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொருளாதாரத்தின் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வேலை கிடைத்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். ஆனால், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது முறையல்ல. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆள்தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவுபடுத்தி தகுதியானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com