

சென்னை,
பழிவாங்கும் நடவடிக்கை ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என முதல் - அமைச்சர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பழிவாங்கும் நடவடிக்கை ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல முதல் - அமைச்சர் விஜய் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகளை உங்கள் ஏவல்துறை இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் அடக்குமுறையாகத் தான் தெரிகிறது. அரசியல் பேசும் பெண்களை அராஜகமாக அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
சூரியன் மறைந்த பிறகோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ பெண்களை கைது செய்யக் கூடாது என்ற பொதுவான சட்ட விதியை மீறி, அதிகாலை 5 மணிக்கு வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு கார்த்திகா என்ன பயங்கரவாதியா? சம்மன் அனுப்பி சரண்டர் ஆக சொல்லாமல், இரு பெண் பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்மணியின் மீது இப்படியொரு அடக்குமுறை அவசியம் தானா?
பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்ணிற்கு உங்கள் அரசு தரும் மரியாதை இதுதானா முதல்வரே? இப்படி மற்ற கட்சிக்காரர்களின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருப்பதால் தான், உங்கள் கட்சியில் பாலியல் குற்றவாளிகளும், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது சட்டத்தை உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்தாமல், மக்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துங்கள்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.