

சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு பிரிந்து சென்றவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம். ஆனால் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் த.வெ.க. தலைவரை அவர்களால் சுலபமாக பார்க்க முடியாது. ஆட்சி, காட்சிகள் மாறும்போது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அவ்வாறு வந்தால் அவர்கள் ஜீரோவில் இருந்து தான் அவர்களது அரசியல் பயணம் தொடங்கப்படும்.
தேர்தலில் தி.மு.க. தலைவர் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் வெற்றி பெறமுடியவில்லை. த.வெ.க.தலைவர் விஜய் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எடப்பாடி தொகுதியில் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன், என்றார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் உருவ படங்களை வைத்து த.வெ.க. தலைவர் விஜய் ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்தார். நமது தலைவர்களை வைத்து வெற்றி பெற்றுள்ளதால் அது உண்மையான வெற்றியாக கருதமுடியாது. ஜனநாயகன் படத்தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாவும், அவருக்கு ஆலோசகருக்கு தமிழ்நாடு அரசின் ஆலோசகராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சொல்லபோனால் முதல்-அமைச்சருக்கு மேக்கப் போடும் நபருக்கும் வரும் நாட்களில் பதவி கொடுப்பார்கள்?. த.வெ.க. ஆட்சிக்கு வந்து 60 நாட்களில் தி.மு.க. ஆட்சியில் இருந்ததுபோல் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக நடந்து வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என நினைத்து ஏராளமான வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசினார். தற்போது நிதியில்லாமல் விழி பதுங்கி நிற்கிறார். த.வெ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் எப்போது வேண்டுனாலும் காலை வாறிவிடுவார்கள். அப்போது இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன்பிறகு வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எனவே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சி பணியாற்ற வேண்டும்” என்றார்.