

சென்னை,
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக கேட்டறிந்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும், நடைபெறவுள்ள பணிகளை விரைந்து தொடங்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, தாட்கோ, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கல்வித்துறை, உணவு பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், மைய சமையல் கூடங்களில் தேவையான பொருட்களின் இருப்பினையும் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றிடும் வகையில் மோட்டார் பம்புகள், மோட்டார் பம்புகளுடன் கூடிய நீர் சேகரிப்பு தொட்டிகள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திட வேண்டும். விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை கத்தரித்து அகற்ற வேண்டும். மழைக்காலங்களில் சேகரமாகும் திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின்கம்பிகள், மின்கேபிள்களை சீரமைத்து, மின்பெட்டிகளை உயர்த்தி அமைக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு 1913 உதவி எண், ட்விட்டர், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வரும் மழை தொடர்பான புகார்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பட்டா தொடர்பான கோரிக்கைகள் விரைந்து முடித்து எந்தவித இடையூறும் இல்லாமல் பட்டா வழங்கிடவும், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளவும், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
காவல் துறையின் சார்பில் 24x 7 மணிநேரமும் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மையம் மற்றும் மாநகராட்சி ஒருங்கிணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் சேதமடைந்த சாலைகளை பருவமழைக்கு முன்னதாக சீரமைக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மின்சாரத்துறை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், உள்ளிட்ட சேவைத்துறைகள் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாவட்ட கலெக்டர் எஸ். மாலதி ஹெலன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து மேற்கு) கே.பெரஸ் கான் அப்துல்லா, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.