

சென்னை,
முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கவும், பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியும், வருத்தத்தையும் அளிக்கிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல் வருடந்தோறும் வெடி விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அஞ்சத்தக்கது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகித்து ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் சிவகாசியில் பெரும்பாலான ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டும், முறையான உரிமம் இன்றியும் செயல்பட்டு வருவதே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
தமிழக அரசு வெறும் நிவாரணத் தொகையுடன் இதுபோன்ற விபத்துக்களைக் கடந்து விடாமல் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கவும், பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.