அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.

எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com