ஈரோட்டில் பருப்பு உற்பத்தி குறையும் அபாயம்... மழை இல்லாததால் சாகுபடி சரிவு!

பவானிசாகர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
பருப்பு
Published on: 

ஈரோடு,

ஈரோட்டில் பருப்பு உற்பத்தி குறையும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

பருப்பு வகைகள்

சமையலில் பருப்பு வகைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக சைவ உணவுகளில் தவிர்க்க முடியாத பொருளாக பருப்பு வகைகள் உள்ளன. சாம்பார், கூட்டு, குழம்பு வகைகள், கார உணவுகள், இனிப்பு வகைகள் என அனைத்திலும் பருப்பு பயன்பாடு இருக்கும். மேலும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு இணையாக சத்துகள் பருப்பு வகைகளில் உள்ளதால் சைவ பிரியர்களின் தேர்வாக உள்ளன.

தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கடலூர், திருவாரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரம் பருப்பு, உளுந்து போன்றவை பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்திலும் துவரம் பருப்பு, உளுந்து, பச்சை பயறு. கொள்ளு, காராமணி போன்ற பருப்பு வகைகள் பரவலாக பயிர் செய்யப்பட்டு வருகிறது.

உற்பத்தி குறைவு

இந்த நிலையில் நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதன்காரணமாக பவானிசாகர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தற்போது பருப்பு வகைகள் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஆண்டில் பருப்பு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் துவரம் பருப்பு, உளுந்து, பச்சை பயறு, கொள்ளு, காராமணி, நிலக்கடலை, எள் போன்றவை பரவலாக பயிர் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 419 ஏக்கர் துவரம் பருப்பு சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் 1,302 ஏக்கர் மட்டுமே துவரம் பருப்பை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். உளுந்து கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 678 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது 1,697 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பச்சை பயறு

நிலக்கடலை 31 ஆயிரத்து 330 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 27 ஆயிரத்து 213 ஏக்கர் மட்டும் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 756 ஏக்கர் பச்சை பயறு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 694 ஏக்கர் மட்டுமே பச்சை பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொள்ளு கடந்த ஆண்டு 1.218 ஏக்கர் பயிரிடப்பட்டது. தற்போது 694 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

எள்

கடந்த ஆண்டு 1,181 ஏக்கர் பரப்பளவு சாகுபடி செய்யப்பட்ட எள் தற்போது 736 ஏக்கர் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. காராமணி 1,551 ஏக்கர் கடந்த ஆண்டு பயிரிடப்பட்டது. தற்போது 1,107 ஏக்கர் காராமணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிற பருப்பு வகைகளையும் சாகுபடி செய்வதை விவசாயிகள் குறைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X