ஆற்று மணல் கொள்ளை புகார்: துரைமுருகன் உட்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது மணல் குவாரி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆற்று மணல் கொள்ளை புகார்: துரைமுருகன் உட்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
Published on: 

சென்னை,

ஆற்று மணல் கொள்ளை புகார் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரூ.1,427 கோடி முறைகேடு புகார்

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, 2023-ம் ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் ரூ.1,427 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் உள்ளிட்டோர் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையைத் தொடங்கி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

34 இடங்களில் அதிரடி சோதனை

இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 6-ம் தேதி 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மணல் குவாரி முறைகேட்டில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக, ஒரு துறையில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் நிலையில், அந்தத் துறையின் முன்னாள் அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 34 இடங்களில் சோதனை நடைபெற்றபோதிலும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை.

இதனால், அடுத்தகட்டமாக துரைமுருகனின் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக விரைவில் சம்மன் அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

விசாரணை

கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த மாதம் 26-ந்தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது மணல் குவாரி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்திருந்தது.

27 பேர் மீது வழக்கு

இந்நிலையில் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர். -FIR) வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை சட்ட விரோதமாக ஆறுகளில் மணல் அள்ளி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய புகார் தொடர்பாக துரைமுருகன் உட்பட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் 18 அரசு அதிகாரிகள் மற்றும் 9 தனி நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மணல் அள்ளி, அரசுக்கு ரூ.1,427 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில், மணல் எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டுகளை போலியாக தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

X