

கோத்தகிரி,
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் தொழில்நுட்பம் தயாராகி வருகிறது என்று கோத்தகிரி அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் வசந்தாமணி வரவேற்றார்.
கருத்தரங்கில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் பாலசுந்தரம், சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசியதாவது:-
இந்த ஆண்டு ராக்கெட் புரட்சி என்ற கருப்பொருளில் உலக விண்வெளி வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் விண்வெளியில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்வது, ஒருமுறை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, மேலும் தொலைதூரங்களுக்கு செலுத்தப்படும் ராக்கெட்டுகள் குறித்து ஆய்வு செய்வதே ஆகும். நவீன விண்வெளி ஆய்வு ராக்கெட் தொழில் நுட்பம் இன்றி செயல்படாது.
ஒவ்வொரு நாட்டின் சார்பாகவும் விண்ணில் வலம் வரும் ஆயிரக்கணக்கான சாட்டிலைட்டுகள் ராக்கெட் உதவியுடன் தான் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. முதன் முதலில் ரஷியா அனுப்பிய ராக்கெட்டில் ஒரு நாயை வைத்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு ராக்கெட்டுகள் சர்வ சாதாரணமாக சென்று வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் என்ற செயற்கைக்கோள் இந்தியாவின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.
நிலவிற்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை பத்திரமாக திரும்ப கொண்டு வந்தது ராக்கெட் தொழில்நுட்பத்தில் மகத்தான வெற்றி ஆகும். அடுத்தது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் ராக்கெட் தொழில்நுட்பம் தயாராகி கொண்டிருக்கிறது. தற்போது ராக்கெட் தயாரிப்பில் அரசு நிறுவனங்களோடு தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் பேசினர்.