

சென்னை,
சென்னை வேளச்சேரி பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது தந்தையுடன் வசித்து வரும் இளம்பெண், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.
அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த மர்ம நபர், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அதற்குள் மகளின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து தந்தை எழுந்து வந்ததால் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி (வயது 28) என்பதும், ரவுடியான அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் பாலுசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.