விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டேர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் விஷ சாராய உயிரிழப்பு நடக்கவில்லை; நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷ சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று அமைச்சர் அமித்ஷாவிடம் கோரப்படும். உயிரிழந்தவர்களின் உயிருக்கு மதிப்பளித்து நாளையே முதற்கட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் அரசு; கள்ளச்சாராயம் காய்ச்சிய எத்தனை பேரை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது?. விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதி உதவி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்காக அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் முதல்-அமைச்சர் இருக்கிறார். பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி பகுதி மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடன் இருக்க வேண்டும். மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த விவகாரத்தில் பாஜக அமைக்கும் குழு 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com