2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி


2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 3 Jun 2025 11:44 AM IST (Updated: 3 Jun 2025 11:48 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்த 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகரம் கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் குழித்துறை தடுப்பணை மேல்பகுதியில் வாவுபலி திடல் அருகில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நின்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவர் கடந்த 1-ம் தேதி சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகியஇருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இந்த நபர்களை காப்பாற்ற தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு இளைஞர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டுமிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு இளைஞர்களை காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள .பீட்டர் ஜான்சனின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு ஓர் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, பீட்டர் ஜான்சன் என்பவரின் துணிச்சல் மற்றும் அவரது தியாக உணர்வைப் போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story