இலங்கை கடற்படை தாக்குதலால் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல் அமைச்சர் அறிவிப்பு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பலியான கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படை தாக்குதலால் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல் அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 18-10-2021 அன்று விசைப்படகில் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் என்றும், அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரியவந்ததையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேற்படி 3 மீனவர்களில் சுகந்தன் (வயது 22), சேவியர் (38) ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (28) என்பவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வரப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com