

நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாமிரபரணி ஆற்றின் தூய்மை யைப் பாதுகாக்கவும், ஆற்றில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் மோணிகா ராணா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சுகுமார் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள், கண்காணிப்பு மற்றும் விதிமுறைகளை மீறுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆற்றில் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை ரூ.26,000 அபராதம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் அம்பாசமுத்திரம் நகராட்சி, முக்கூடல் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள் வழியாகவும், திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளான மேல நத்தம், கருப்பந்துறை, சி.என்.கிராமம், வண்ணார்பேட்டை, மணிமூர்த்திஸ்வரம், அருகன்குளம் மற்றும் நாரணம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களில் கழிவுப் பொருட்களை ஆற்றில் வீசுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீது குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.