

சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம், தேர்போகி கிராமம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (15.6.2026) அதிகாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து தேவிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் (41 வயது) என்பவர் ஓட்டி வந்தபோது ராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பக்கத்தில் மோதியதில் தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தலைமைக் காவலர் எம். மகேஷ்குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
எம். மகேஷ்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.