மாணவர்களின் ஆதாரை பயன்படுத்தி ரூ.75 கோடி மோசடி

மோசடி செய்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஆதாரை பயன்படுத்தி ரூ.75 கோடி மோசடி
Published on: 

சேலம்,

கல்லுாரி மாணவர்கள், 7,500 பேரின் ஆதார் விபரங்களை பயன்படுத்தி, 75 கோடி ரூபாய் வரை வங்கி கடன் பெற்று மோசடி நடந்துள்ளதாக, சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

1,000 ரூபாய் கமிஷன்

சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவர்கள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சில மாதங்களுக்கு முன், 'பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட்' அமைப்பை சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். 'உங்கள் வங்கி கணக்குகளுக்கு, 1 லட்சம் ரூபாய் வரும். அதை நாங்கள் கூறும் கணக்கிற்கு மாற்றினால், 1,000 ரூபாய் கமிஷனாக தருகிறோம்' எனக்கூறி, ஆதார் அட்டைகளை பெற்றனர்.

பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட்

தொடர்ந்து பணம் அனுப்பவே, நாங்களும் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பி, கமிஷனும் பெற்றோம். இந்நிலையில், தனியார் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில் 'மாடு வாங்க கடன் பெற்ற தவணையை செலுத்தவில்லை. விரைவில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்தோம்.

வங்கி தரப்பில் கேட்டபோது, 'பெஸ்ட் எம்பவர்மென்ட் டிரஸ்ட் மூலம், மாடு வாங்க கடன் பெற்றுள்ளீர்கள். உங்களை போன்று சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில், 7,500 பேர் கடனுதவி பெற்றுள்ளனர்' என கூறினர்.

அரசு வக்கீல்

அந்த அமைப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இந்த இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு, அரசு வக்கீல் ஒருவரும் துணையாக உள்ளார். மோசடி செய்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மாணவர்களின் புகாருக்கு சி.எஸ். ஆர். அளித்த போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X