

தேனி,
தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் நடந்துள்ள ரூ.14 கோடி நகைக்கடன் மோசடி தொடர்பாக வங்கி கிளைகளின் மேலாளர், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 2 கிளைகளில் அதிகாரிகள் நடத்திய தணிக்கையில், ரூ.14 கோடி மதிப்பிலான நகைக்கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வங்கி லாக்கரில் இருந்த பல உறைகளில் நகைகள் ஏதுமின்றி காலியாக இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த 2 கிளைகளிலும் பணியாற்றிய வங்கி மேலாளர் மற்றும் சில ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.