தூத்துக்குடியில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்: கலெக்டர் விஷு மகாஜன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு, இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு ரூ.82 லட்சத்து 39 ஆயிரத்து 716 விடுவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்: கலெக்டர் விஷு மகாஜன் தகவல்
Published on

தூத்துக்குடி,

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் அதிரடி சோதனையில் நேற்று வரை கைப்பற்றப்பட்ட பணம், பொருள்களின் விவரங்கள் பின்வருமாறு:

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.83 லட்சத்து 93 ஆயிரத்து 266.

இலவச பொருட்கள்: வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதாகக் கருதப்படும் ரூ.13 லட்சத்து 84 ஆயிரம் 801 மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுபானங்கள்: விதிமீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 403 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட தொகை மற்றும் பொருட்கள்:

பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில் சில தொகைகளும், பொருட்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.82 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆகும். மேலும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 200 ஆகும்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உரிய ஆவணங்களின்றி பணத்தையோ அல்லது பரிசுப் பொருட்களையோ கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com