ஒப்பந்த ஊழியர்
திருவாரூரை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 30). இவர், ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு தீபிகா(27) என்ற மனைவியும், பிறந்து 22 நாட்களான குழந்தையும் உள்ளனா. சுபாஷ் கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
எலி மருந்தை தின்று தற்கொலை
சம்பவத்தன்று சுபாஷ் வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) தின்றுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் பாதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
தொகுப்பு ஊதியத்தின் கீழ் பணியாற்றி வந்த சுபாஷை ஊக்கத்தொகை அடிப்படையில் பணி மாற்றப்பட்டதாகவும், இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி அவரது உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றிய ஊழியர்கள் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலை செய்து கொண்ட சுபாஷின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதே திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பணி புரியும் 1,248 பேருக்கு மீண்டும் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், சப்-இன்ஸ்பெக்டர் வைரமணி, தாசில்தார் நக்கீரன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.