ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை உள்ளூர் மயமாக்க வேண்டும் - ராமதாஸ்

ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை உள்ளூர் மயமாக்க வேண்டும் - ராமதாஸ்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக, அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைத்திருக்கிறது.

மக்களுக்கான திட்டத்தை, மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் குழு அளித்திருக்கும் பரிந்துரை வரவேற்கத்தக்கது. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் இப்போதைய விதிகளின்படி, கிராம ஊராட்சிகள் மத்திய அரசால் பட்டியலிடப் பட்டுள்ள பணிகளைச் செய்யும் முகவர்களாகவே செயல்படுகின்றன.

ஆனால், இந்தத் திட்டம் உள்ளூர்மயமாக்கப் பட்டால், மக்களுக்கு தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய கனவை நிறைவேற்றுவதற்கு இது பெருமளவில் உதவும்.

எனவே, வேளாண்மை உள்ளிட்ட பிற பணிகளுக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக அத்திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்ற வல்லுனர் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம், பொதுமக்களுக்கும், சமூகத்திற்கும் நன்மைகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com