கருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்

தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும்தான்.

பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்ட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது தி.மு.க. அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com