சபரிமலை சீசன்: கன்னியாகுமரியில் இருந்து பம்பைக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கம்


சபரிமலை சீசன்: கன்னியாகுமரியில் இருந்து பம்பைக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கம்
x

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

சென்னை,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி, விரதம் இருந்து வந்து செல்கிறார்கள். அதிலும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ரெயில் மற்றும் பஸ்களிலும், கார், வேன் போன்ற வாகனங்களிலும் வந்து செல்கிறார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்கள், அய்யப்பனை தரிசனம் செய்த பிறகு கன்னியாகுமரிக்கும் வந்து செல்கிறார்கள்.

இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரு மாநில அரசுகளின் போக்குவரத்து துறையும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சபரிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பம்பை வரை முதல் முறையாக பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதற்கான அனுமதிச்சான்றுகளை அரசு போக்குவத்துக்கழகம் நேற்று பெற்றுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பம்பைக்கு முதல் பஸ் புறப்பட இருக்கிறது. அந்த பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பம்பைக்கு செல்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பம்பைக்கு மற்றொரு பஸ் புறப்பட்டுச் செல்கிறது. இந்த 2 பஸ்களும் மண்டல பூஜை முடியும் வரை, அதாவது வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்பட்ட உள்ளது.

1 More update

Next Story