வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியம் இருமடங்கு உயர்வு

வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை இருமடங்காக உயர்த்தி தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியம் இருமடங்கு உயர்வு
Published on

 புதுடெல்லி,

தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட வாக்காளர் பட்டியல் பொறிமுறை, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தேர்தல் கமிஷன், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் ஊதியத்தையும் உயர்த்தியுள்ளது. கடைசியாக இதுபோன்ற திருத்தம் 2015-ல் செய்யப்பட்டது.மேலும், தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு முதல் முறையாக கவுரவ ஊதியம் வழங்கப்படவுள்ளது.

2015-ம் ஆண்டு வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இது ரூ.12,000 ஆக உயர்த்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-த்தில் இருந்து, ரூ.2,000-ஆக உயர்த்தப்படுகிறது. வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12,000-த்தில் இருந்து ரூ.18,000-ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் பதிவு மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு முறையே ரூ.30,000 மற்றும் ரூ.25,000 என மதிப்பூதியம் முதல்முறையாக வழங்கப்படுகிறது.

இது தவிர, பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ரூ.6,000 சிறப்பு ஊக்கத்தொகையையும் கமிஷன் அங்கீகரித்துள்ளது.துல்லியமான வாக்காளர் பட்டியலை பராமரிக்கவும், தேர்தல் செயல்முறையை வலுப்படுத்தவும் கள அளவில் அயராது உழைக்கும் தேர்தல் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவதற்காக தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com