

சென்னை,
தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் 8,741 கவுரவ விரிவுரையாளர்களும், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 319 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களும் பயன் பெறுவார்கள். இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.