

சேலம்,
சேலம் அருகே கருப்பூர் திடீர் பட்டினத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாரதா (வயது 51). இவர், அங்குள்ள ஒரு முருகன் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர். வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். இதையடுத்து அந்த வாலிபர், சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு தேங்காய் கேட்டுள்ளார்.
இதையடுத்து சாரதா 2 தேங்காய்களை எடுத்து கொடுத்தபோது, அவர் கழுத்தில் அணிந் திருந்த 22 கிராம் எடை கொண்ட தாலிச்சங்கிலியை அந்த வாலிபர் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சாரதாவிடம் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
<