சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - மாணிக்கம் தாகூர்

மூன்று மணி நேரம் பட்டிமன்றம் நடந்தாலும், அனைவரும் மகிழ்கின்ற வகையில் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பட்டிமன்றங்களை நடத்தியவர் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - மாணிக்கம் தாகூர்
சாலமன் பாப்பையா, மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

நீங்கா இடம் பெற்றவர்

தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், நாடறிந்த சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் மதுரையில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் ஆழமான, அறிவுப்பூர்வமான அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

கலைமாமணி விருது

திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

தனி சிறப்பு

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் என்றால் அரங்கமே ஆரவாரத்துடன் ரசித்து, மகிழ்ந்து, கைதட்டி வரவேற்கின்ற வகையில் அமைவது தனி சிறப்பாகும். மூன்று மணி நேரம் பட்டிமன்றம் நடந்தாலும், அனைவரும் மகிழ்கின்ற வகையில் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பட்டிமன்றங்களை நடத்தியவர்.

சாலமன் பாப்பையாவின் இழப்பு தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com