சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. மாத ஊதியத்துடன் ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை சாம்சங் ஏற்றுள்ளது. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

நீதிமன்றத்தில் உள்ள இவ்விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும்போல காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை.

தொழிலாளர்களின் நலனும் முக்கியம்; இளைஞர்களின் வேலைவாய்ப்பு அரசுக்கு முக்கியம். போராடும் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை; அடக்குமுறை நடக்கவில்லை. போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com