தமிழக புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்

தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிரந்தர டி.ஜி.பி. நியமிக்கப்படவில்லை. பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் பணியாற்றி வந்தார். இதுகுறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. சட்டம் ஒழுங்குக்கு நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்கவில்லை என்பதால் தமிழகத்தில் குற்றங்கள் பெருகி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையே டி.ஜி.பி. நியமனத்திற்காக 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே தேர்தல் தேதி கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன் பின்னர் கடந்த மார்ச் 30-ம் தேதியில் இருந்து தேர்தல் கமிஷனின் அறிவிப்பாணை அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் தேர்தல் கமிஷனின் அதிகாரத்திற்கு உள்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்துவந்த வெங்கடராமனை காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு, புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு தேர்தல் கமிஷனின் செயலாளர் லதா திரிபாதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் நடக்க இருக்கிற சட்டமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து தேர்தல் கமிஷன் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் டி.ஜி.பி.யை நியமனம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி 1992-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுகிறார். தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வர வேண்டும். இந்த உத்தரவின் மூலம் பணியில் இருந்து மாற்றம் செய்யப்படும் அதிகாரிக்கு, தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணியும் வழங்கப்படக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர்:

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியைச் சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். தேசிய பேரிடர் மேலாண்மைப் படையில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. 1998-ம் ஆண்டு கோவை நகர துணை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் இருந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்தார். அதே ஆண்டில் திகார் சிறையின் கமாண்டிங் அதிகாரியாக பொறுப்பேற்றார். அங்கு முதன்முறையாக செல்போன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதில் அவரது பங்கு முக்கியமானது. 2001-2002-ம் ஆண்டில் சிறப்பு காவல் படையில் பங்கேற்று சிறப்பான பணிக்காக பதக்கம் வென்றவர் சந்தீப் ராய் ரத்தோர். 2003-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக பணியாற்றினார். அப்போது முத்திரைத்தாள் மோசடி வழக்கை திறம்பட விசாரித்தார். 2005-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோதுதான் அந்த மாவட்ட காவல்துறைக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது. அங்கு கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழித்ததில் அவர் சிறப்பாக பணியாற்றினார்.

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:

மேலும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக லதா திரிபாதி, தமிழக தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், '1997-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய்குமார் தாம்பரம் போலீஸ் கமிஷனராகவும்; 2006-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி அபிஷேக் தீக்சித் மதுரை போலீஸ் கமிஷனராகவும்; 2008-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ரம்யா பாரதி, மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் (கோவையில்) நியமிக்கப்படுகின்றனர். இந்த உத்தரவின் மூலம் பணியில் இருந்து மாற்றம் செய்யப்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு, தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணியும் வழங்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டுள்ளார்.

புதிய கலெக்டர்கள் நியமனம்:

ஐ.பி.எஸ். அதிகாரிகள் தவிர சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு லதா திரிபாதி எழுதிய கடிதத்தில், 'தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த பிறகு சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக விஷ்ணுமகாஜன் ஆகியோரை நியமித்து உத்தரவிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது குறித்து 3-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்றும் இந்த உத்தரவின் மூலம் பணியில் இருந்து மாற்றம் செய்யப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு, தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணியும் வழங்கப்படக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனின் உத்தரவையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை உடனடியாக அதற்கான பணியிடங்களில் நியமித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார்:

சந்தீப் ராய் ரத்தோர் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட தேர்தல் கமிஷன் உத்தரவு நேற்று மாலை 6 மணியளவில் வெளியானது. அதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு. நேற்று இரவு 8 மணியளவில் வெளியிடப்பட்டது. அந்த உத்தரவு வெளியான அடுத்த 30 நிமிடங்களுக்குள் சந்தீப் ராய் ரத்தோர் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்து பதவியேற்றுக் கொண்டார். தற்போது மாற்றப்பட்டுள்ள பொறுப்பு டி.ஜி.பி. ஆன வெங்கடராமன் நேற்று டெல்லியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com