

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தங்களது பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து அண்ணா சிலை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பதை முதன்மை கோரிக்கைகளாக முன்வைத்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் காரணமாக நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் அன்றாட தூய்மைப் பணிகள் மற்றும் குப்பை சேகரிக்கும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழலால் திருச்செங்கோடு அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது.