சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீஸ்காரர்களுக்கும் இன்று தண்டனை அறிவிப்பு

கடந்த மாதம் 23-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீஸ்காரர்களுக்கும் இன்று தண்டனை அறிவிப்பு
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து மத்திய அரசின் சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 30-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரின. இதன் காரணமாக வழக்கு இன்றைய தினத்திற்கு (ஏப்ரல் 2) ஒத்திவைக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும் பட்சத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீஸ்காரர்களுக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com