சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ ஸ்ரீதர் மனு தீர்ப்பிற்காக ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் ஆவதாக மனு தாக்கல் செய்து இருந்தார்.
மதுரை,
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஜூன் 19-ல் ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு உட்பட 9 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற த்தில் நடந்து வருகிறது.காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஸ்ரீதர் தரப்பு வாதிடுகையில், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக மனு தாக்கல் செய்யவில்லை. அரசு தரப்புக்கு சாதகமாக இருக்கும் நோக்கத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். மனுவை ஏற்க வேண்டும் என்றார். இந்த வழக்கில் அப்ரூவர் தேவையில்லை. ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சம்பவத்தின் மூளையே ஸ்ரீதர்தான். இவரால் தான் இச்சம்பவமே நிகழ்ந்தது.
இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளது. காவல் துறையில் 4 முக்கிய சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் ஸ்ரீதரின் சாட்சியம் தேவை இல்லை ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதம் நிறைவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






