சுட்டெரிக்கும் வெயில்: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில்: ஊட்டியில்  குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

ஊட்டி,

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதிய நேரங்களில் வெளியில் செல்வதே சவாலாக இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயில் காரணமாக மக்கள் குளிர்ச்சியான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறையை இதமாக கழிக்க நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன்முன்பு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள பெரிய புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.

இதேபோன்று ஊட்டி ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா பூக்களை கண்டு ரசித்தனர். ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. படகு சவாரி செய்து அங்கு நிலவிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இது மட்டுமல்லாது தொட்ட பெட்டா மலைசிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன்பாரஸ்ட், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா தலங்களையொட்டி கடைகளில் குவியும் மக்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஊட்டியில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். இன்னும் சில வாரங்களில் கோடைவிழா தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com