புதிய கல்வி கொள்கையின் நேரடி வடிவம்: தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும் என்று நெல்லை முபாரக் தெரிவித்தார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடரின் கடைசி நாளில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன்வடிவு - 2026’ உயர் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கும் பேராபத்து கொண்டது என்பதால், தமிழக அரசு இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் கூறுகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த கூடாது என்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

அதிர்ச்சியளிக்கிறது

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு 100 ஏக்கர் நிலமும், 50 கோடி ரூபாய் நிலையான அறக்கட்டளை நிதியும் தேவை என்றிருந்த விதியை தளர்த்தி, சென்னை போன்ற பெருநகரங்களில் வெறும் 12 ஏக்கர் நிலமும், பிற பகுதிகளில் 18 முதல் 25 ஏக்கர் நிலமும் இருந்தால் போதும் என மாற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனநாயக பண்புகளுக்கு எதிரானது

உயர்கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் முடிந்து 15 நாட்கள் கழித்து, சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரகதியில் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது ஜனநாயக பண்புகளுக்கு எதிரானது. பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் நியாயமான எதிர்ப்புகளையும் மீறி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

முரண்பாடான போக்கு

கல்வி சேவையை வழங்கிடும் அரசின் பொறுப்பை துறந்து, அதை தனியாரிடம் ஒப்படைக்க துடிக்கும் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் நேரடி வடிவமே இந்த சட்ட திருத்தமாகும். புதிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறிவிட்டு, அதன் கூறுகளை இத்தகைய சட்ட திருத்தங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவது அரசின் முரண்பாடான போக்கை காட்டுகிறது.

அறக்கட்டளை நிதி

மேலும், 50 கோடி ரூபாயாக இருந்த அறக்கட்டளை நிதியை வெறும் 25 கோடி ரூபாயாக பாதியாக குறைத்திருப்பது, உயர்கல்வியை தனியார்மயமாக்குவதற்கும் வணிகமயமாக்குவதற்கும் அரசே சிவப்பு கம்பளம் விரிப்பது போல் உள்ளது. எதிர்பாராதவிதமாக ஒரு தனியார் பல்கலைக்கழகம் திவாலாகும் பட்சத்தில், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே இந்த அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டது.

பாதுகாப்பிற்கு உலை

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிதியை சரிபாதியாக குறைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு உலை வைப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அத்துடன், இந்தச் சலுகையை ஏற்கெனவே இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும், பின்தேதியிட்டு நீட்டித்திருப்பது யாருடைய நலனுக்காக என்ற கேள்வி எழுகிறது.

பறிபோகும் அபாயம்

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் கல்வி வணிகம் பெருகுவதோடு, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சமூகநீதியும் இடஒதுக்கீட்டு உரிமைகளும் முற்றிலுமாக பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும்.

ஏற்புடையதல்ல

உயர்கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கத்தை எளிதாக்கிவிட்டு அரசு தன் கடமையிலிருந்து விலகி செல்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசுதான் கூடுதல் பொது கல்வி நிறுவனங்களை உருவாக்கி எளிய மக்களுக்கு கல்வி வழங்க வேண்டுமே தவிர, அதை வணிக நோக்கிலான தனியாரிடம் ஒப்படைக்க கூடாது.

எனவே, மாணவர் நலனுக்கும் சமூகநீதிக்கும் எதிரான ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை’ தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், புதிய கல்வி கொள்கையின் எந்தவொரு கூறையும் மாநிலத்தில் செயல்படுத்த கூடாது என்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com