

திருச்செந்தூர்,
ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூரில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணம் என்ன என்று ஆராய்ச்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தின, பிந்தின நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூரில் சுமார் 100 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல கடலில் புனித நீராடினர். சிலர் பாசிபடர்ந்த பாறைகளில் ஏறி நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
கடல் உள்வாங்குவது ஏன்? என்பது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலத்தியல் துறை உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான செல்வம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் கடல் அலைகளின் வேகம், உயரத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழக்கமாக கடல் மட்டம் குறைவதும், உயர்வதும் இயல்பாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நில அமைப்புகளை வைத்து பார்க்கும்போது மிகவும் மேடான பகுதியாகும். அதே போன்று அந்த பகுதி ஒரு முனை போன்று வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும். இதனால் கடல் அந்த பகுதியில் உள்வளைந்து செல்லும். இந்த சூழலில் வழக்கம்போல் கடல் நீர்மட்டம் குறையும்போது, நீண்ட தூரம் கடல் உள்வாங்கி மேடான பகுதி வெளியில் தெரிகிறது. இது சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். இவ்வாறு அவர் கூறினார்.