ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த திமுக, அதிமுக அலுவலகங்களை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலை முதலே கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

மேலும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.

மேலும் தேர்தல் அலுவலகம் திறப்பு, பிரசாரம், வாகனங்கள், பொதுக்கூட்டத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பதாக கூறினர். இதே போல் அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

தி.மு.க. சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே. ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைராபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு ஆகிய இடங்களில் தி.மு.க தேர்தல் அலுவலகமும், திருவள்ளுவர் நகர், கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள அலுவலகம், ஆலமரத்து தெரு, மணல் மேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகமும் அனுமதி இன்றி செயல்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை தேர்தல் அதிகாரிகள் கள்ளுக்கடை மேட்டில் திறக்கப்பட்டு இருந்த தி.மு.க. தேர்தல் பணிமனையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு இடமாக சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்த கட்சியினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவும் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com