

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாகத் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தைப் பொதுப் பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அனுபா ஸ்ரீவஸ்தவா, மாவட்டத் தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் 1,678 வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) எந்திரங்கள் இந்தக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வசதிகளுடன் வாக்கு எண்ணும் மையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டிட ஒதுக்கீடு விவரம்:
திருநெல்வேலி மற்றும் நாங்குநேரி தொகுதிகள் நிர்வாகப் பிரிவு கட்டிடம், அம்பாசமுத்திரம் தொகுதி மெக்கானிக்கல் பிரிவு கட்டிடம், ராதாபுரம் தொகுதி – கணினிப் பிரிவு கட்டிடம், பாளையங்கோட்டை தொகுதி மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு கட்டிடம்.
இந்த மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகளும், வாக்கு எண்ணுவதற்கான அறைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையற்ற மின்சாரத்திற்கான ஜெனரேட்டர் வசதிகள், குடிநீர் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மேஜைகள் அமைத்தல் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளிலும் வாக்கு எண்ணிக்கை அறைகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை, பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி கமிஷனருமான மோனிகா ராணா, அம்பாசமுத்திரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் சேரன்மகாதேவி சார் ஆட்சியருமான ஆயுஷ் குப்தா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிந்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்), தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.