

திருவண்ணாமலை,
கஞ்சா விற்பனையில் சாதுக்கள் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாதுக்களிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புதிதாக வரும் சாதுக்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் தங்கி கிரிவலம் வருகின்ற பக்தர்களிடம் யாசகம் பெற்று அங்கேயே வசித்து வருகின்றனர். ஒரு சிலர் சாது போர்வையில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை உட்கொண்டு தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் கிரிவலப்பாதை முழுவதும் சாதுக்கள் கஞ்சா பயன்படுத்துகிறார்களா? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சில சாதுக்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரும்போது அவர்கள் கஞ்சா கொண்டு வந்து கிரிவலப்பாதையில் அதனை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் நேற்று திருவண்ணாமலை மேற்கு போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தகுளம் அருகே நடைபாதையில் வசித்து வரும் சாதுக்களிடம் அவர்கள் வைத்திருக்கும் பைகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் உள்ளனவா என போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் எவரேனும் உள்ளனரா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தொடர்ந்து வசித்து வரும் சாதுக்களுக்கு வெளி மாநில சாதுக்களுடன் தொடர்பு உள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து அவர்கள் கொண்டு வரக்கூடிய கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை இவர்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி விற்பனையில் ஈடுபடுவதாகவும். இதற்காக இந்த சோதனை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் புதிதாக கிரிவல பாதைக்கு வரக்கூடிய சாதுக்களை இங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாகவும் கிரிவலப் பாதை முழுவதும் தொடர்ந்து இதுபோன்று சோதனை மற்றும் கண்காணிப்பு நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.