

சென்னை,
செல்வப்பெருந்தகை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நேற்று நியமிக்கப்பட்டார். அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்த இந்த நியமனம் குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மாணிக்கம் தாகூர், பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தி.மு.க.வுடன் மிகவும் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வந்தார். இவர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த காலக்கட்டங்களில் தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பலமாக குரல் எழுப்பி வந்தார்.
தி.மு.க.வுக்கு பிரச்சினை ஏற்படும் காலங்களில் எல்லாம் தி.மு.க. நிர்வாகிகளைவிட தாமே முன்கூட்டி ஆதரவு குரல் எழுப்பி வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பதற்கும் முதல் காரணகர்த்தாவாக திகழ்ந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக த.வெ.க. கூட்டணியில் இருந்து கொண்டே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து தனியார் தொலைக்காட்சிக்கு பகிரங்கமாக பேட்டி அளித்தார்.
முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் அநாகரிகமானது என்றும் குற்றம் சாட்டினார். இப்படி எல்லா வகையிலும் தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார் செல்வப்பெருந்தகை. இத்தகைய அளவிற்கு தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்ட செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருடன் விரைவில் தி.மு.க.வில் இணைய கூடும் என்று சொல்லப்படுகிறது.