சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்


சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
x

மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

சென்னை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை இன்று (3.10.2025) சேதப்படுத்திய மர்ம நபர்களின் ஜனநாயக விரோதச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நீதிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மகத்தான மனிதர் சிலையை அவமதிப்பு அரசியலமைப்புக்கும் சமத்துவ மதிப்புகளுக்கும் நேரடியான அவமரியாதையாகும்.

மர்ம நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் வலைவீசி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் வலியுறுத்தல்.

இத்தகைய தாக்குதல்கள் சமூக ஒற்றுமையை சேதப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன. எனவே அண்ணல் அம்பேத்கரை மதிக்கும் பொதுமக்களின் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

சமத்துவ சிந்தனையின் சின்னமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைகள் மீது எவ்வித அவமதிப்பும், அச்சுறுத்தலும் நடைபெறாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட இயலும். மேலும் அவரின் சிலையை பாதுகாக்கும் பொருட்டு இரும்பு கம்பிகளால் ஆன கூண்டை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story