91 வயதில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்கள்; அசத்தும் முதியவர்

ஆசிய அளவில் 24 பதக்கங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளேன் என்றார்.
91 வயதில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்கள்; அசத்தும் முதியவர்
Published on: 

ஈரோடு

91 வயதில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களுடன் மைதானத்தில் வலம் வந்த முதியவரை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.

தமிழ்நாடு மூத்தோர் தடகள இந்திய கூட்டமைப்பு சார்பில், ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்களாக நடத்தப்படுகிறது. இதில் ஈரோடு, சென்னை, கன்னியாகுமரி, மதுரை, கோவை, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி உள்பட 16 மாவட்டங்களை சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதியவர்

இந்த போட்டியில் 40 முதல் 100 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 91) என்பவர் வருகை தந்துள்ளார்.

இந்த முதியவர் கழுத்து நிறைய பதக்கங்களுடன் மைதானத்தில் வலம் வந்தபோது அவரை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் 73 வயதில் இருந்து ஓட்ட பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.

ஆசிய அளவில் பதக்கங்கள்

ஆசிய அளவில் 24 பதக்கங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளேன். இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அதனை ஓரம் கட்டிவிட்டு முறையாக பயிற்சி எடுத்தால் நீங்களும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லலாம் என்றார்.

போட்டிகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனையடுத்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com