செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு கவர்னர் அனுமதி?

போக்குவரத்துத் துறையில் வேலை அளிப்பதற்கு பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.
செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு கவர்னர் அனுமதி?
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து த.வெ.க. ஆட்சி பீடத்தில் ஏறியது. பொதுவாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சியினரின் பலத்தை குறைப்பதற்கு முயற்சி செய்வது தமிழகத்திற்கு புதிது அல்ல.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. அரசு எடுத்துள்ளது. 2011-16-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை அளிப்பதற்கு பணம் பெற்றதாக அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, சட்டவிரோதமான பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கடந்த ஆண்டு மே மாதம் அப்போதைய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

அதை தமிழக அரசுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தை கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு திருப்பி அனுப்பிவிட்டது. மாநில அரசுக்கு நேரடியாகவே அனுமதி கேட்டு கடிதம் எழுதலாம், கவர்னர் மூலமாக அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் கடிதத்தை தமிழக அரசு அனுப்பி இருந்தது.

இதனையடுத்து கடந்த மாதம் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. அதில், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்ததால் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கவர்னர் அர்லேகருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் விஜய்யின் அனுமதி பெற்று அதற்கான கோப்பு, கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் புகாரை விசாரிக்க கவர்னர் அர்லேகர் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர் விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் அனுமதி அளித்துள்ளதால், அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரை நியமிக்கும் அதிகாரத்தில் இருக்கும் கவர்னர் தான், அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com