மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன.?

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்: உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன.?
Published on

சென்னை,

மேகதாது அணைக்கு எதிராக முதல்-அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார். முதல்-அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினார்கள். குறிப்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசியது பின்வருமாறு;

எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்

”காவிரி விவகாரத்தில் நீண்ட அரசியல், சட்டப் போராட்டம் நடத்திதான் நமது உரிமையை பெற்றுள்ளோம். நமது உரிமை நிலைநாட்டப்பட்டது திமுக அரசினாலேயே என்பதை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள். எங்களுடைய கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் மேகதாது அணை கட்டும் திட்டத்தில், எங்களின் தலைவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்

அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. திமுக அரசின் தொடர் முயற்சியால் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை, நீர்வள அமைச்சகத்தில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டது. திமுக அரசு இருந்தவரை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்

மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாகப் பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனித் தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க அதிமுக ஆட்சியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காவிரி விவகாரத்தில் அதிமுக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தியது. மேகதாதுக்கு எதிராக பிரதமரை நேரில் சந்தித்து ஜெயலலிதா வலியுறுத்தினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றுத்தந்தது அதிமுக.

ஏற்கனவே பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் நீரை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அதே காரணத்தைக் கூறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மேகதாது திட்டம் தமிழகத்தை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்டது. மேகதாது விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. ஒவ்வொரு முறையும் போராடி தான் காவிரி நீரை பெற வேண்டியுள்ளது.

காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார்

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

சுதந்திரம் பெற்றது முதல் காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, மீனவர் பிரச்னை என பேசிக்கொண்டே இருக்கிறோம். நமது உரிமைகளை தொடர்ந்து அண்டை மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சா் விஜய் கா்நாடக முதல்வா் சிவக்குமாருடன் மேகதாது விவகாரம் குறித்து பேச வேண்டும். மின்மிகை நீர் மேலாண்மையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். மாநில நதிகளை முதலில் இணைப்போம். மழைநீா் கடலில் கலப்பதை தவிர்த்தாலே மின்மிகை நீர் மேலாண்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும்.

பாமக எம்.எல்.ஏ., சவுமியா அன்புமணி

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்திற்கு பாமக ஆதரவு அளிக்கிறது. கர்நாடகாவில் 320 கி.மீ மட்டுமே காவிரி நீர் பாய்கிறது, ஆனால் தமிழகத்தில் 420 கி.மீ ஓடுகிறது. காவிாியில் தமிழ்நாட்டிற்குத்தான் அதிக உாிமை உள்ளது. கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டக் கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஐந்தரை கோடி மக்கள் காவிாி நீரை நம்பியே உள்ளனா். 4 அணைகளில் 115 டிஎம்சி தண்ணீரை சேமிப்பது பற்றாமல் மேகதாது மூலம் கூடுதலாக 70 டிஎம்சி நீரை சேமிக்க கர்நாடகா முயற்சிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் நமக்கு வர வேண்டிய தண்ணீரில் ஒரு சொட்டு நீர் கூட வராது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com