‘பாலியல் குற்றவாளிகளுக்கு உயிர் பயத்தை காட்ட வேண்டும்’ - சவுமியா அன்புமணி

போதைப் பழக்கத்தை தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும் என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
‘பாலியல் குற்றவாளிகளுக்கு உயிர் பயத்தை காட்ட வேண்டும்’ - சவுமியா அன்புமணி
Published on

சென்னை,

சட்டமன்ற பா.ம.க. தலைவர் சவுமியா அன்புமணி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சிங்கப்பெண் படைக்கு அதிக பெண்களை பணியமர்த்த இருப்பதாகவும், தொழில்நுட்ப கண்காணிப்பை அதிகரிப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். பா.ம.க.வின் கோரிக்கை என்பது சிங்கப்பெண் படைக்கு என்று தனியாக ஒரு டி.ஜி.பி. நியமித்து அவர் தலைமையில் ஒரு குழு போட்டு பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதாகும்.

அதைவிட குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய போதைப் பழக்கத்தை தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும். அதற்கு மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யார் என்று உடனடியாக தெரிந்துவிடுகிறது. கிட்டத்தட்ட 7 ஆயிரம் வழக்குகள் உள்ளன. அதில் பாதி வழக்குகளை விவாதப் பொருளாகவே எடுக்க முடியவில்லை.

எனவே, 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என்று வழக்குகளை நீட்டிக்காமல், போக்சோ கோர்ட்டுகளையும், மகளிர் சிறப்பு கோர்ட்டுகளையும் அதிகப்படுத்தி தினம், வாரம் தோறும் வழக்குகளை எடுத்தாடி 2 அல்லது 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கி தண்டனை கொடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு உயிர் பயத்தை காண்பிக்கிறார்கள். அந்த பயத்தை கொடுக்க வேண்டும். மரண தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவர்கள் பெண் குழந்தைகள், பெண்கள் மீதும் பாலியல் அத்தூமீறல் செய்வதற்கு துணியமாட்டார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com