

சென்னை,
சென்னையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரம்மநாயகம் (வயது 55). இவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (ஊரக வளர்ச்சித்துறை) பணியாற்றி வந்தார். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளையும், பள்ளி மாணவர்களுக்கான டியூஷன் வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், அங்கு பயிற்சி வகுப்பிற்கு வந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் பல மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தோழி, அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரம்மநாயகத்திடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரம்மநாயகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரம்மநாயகம் ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றியபோது, பரந்தூர் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியிட மாறுதல் பெற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.