

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 8 வயதுடைய 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த குற்றாலம் மகன் முருகானந்தன் (வயது 46) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை இன்று விசாரணை செய்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, மேற்சொன்ன முருகானந்தத்தை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து, பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.