அதிர்ச்சி சம்பவம்.. தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத்திணறி 8 மாத குழந்தை உயிரிழப்பு

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆவடைத்தங்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் விநாயக். இவருடைய மனைவி கண்மணி. இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த நாளன்றே இறந்துவிட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8 மாதங்களுக்கு முன்பு கண்மணிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் உசிலம்பட்டிக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று குழந்தைக்கு கண்மணி தாய்ப்பால் கொடுத்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்மணி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






