அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர்.
மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த சூழலில், மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுஜாதா விசாரணை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. ஏற்கெனவே 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுகளின் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரச்சலூர் பகுதிகளில் நகைக்காக தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






