

மதுரை,
மதுரை மாவட்டம் தேத்தாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் கடுகுமுனியசாமி (23) இவர் ஒத்தக்கடை அருகே பட்டணம் கிராமத்தில் கொடிக்குளம் கால்வாய் ரோட்டில் நேற்று மாலை நண்பர் வண்டியூர் மோகனுடன் (25) சென்று கொண்டிருந்தனர். கொலை செய்வதற்காக காரில் வந்த கும்பல் டூவீலர் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் பின்பு உயிருக்கு பயந்த ஓடிய இருவரையும் விடாமல் துரத்திய அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு மின்னல் வேகத்தில் காரில் தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஒத்தக்கடை போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார் முதற்கட்ட விசாரணையில் ஒத்தக்கடை ரவுடி 'பொட்டுக்கடலை' பெரியசாமி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பட்டணம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய காரின் அடையாளங்களைச் சேகரித்து வருகின்றனர். மீண்டும் மோதல் வெடிக்காமல் இருக்கப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.