காலை உணவுத் திட்டத்திற்கான பொறுப்பை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நிதி ஒதுக்காமல் ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது என்ன மாதிரியான நிதி மேலாண்மை? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான பொறுப்பைத் தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? என தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

காலை உணவுத் திட்டம் நீட்டிப்பு

பெருந்தலைவர் காமராஜரின் பெயரால் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான நிதித் திட்டமிடலின்றி தவெக அரசு செயல்படுவது கடும் அதிர்ச்சியளிக்கிறது. விளம்பரப் பலகை, சமையலறைச் சீரமைப்பு முதல் மாணவர்களுக்கான தட்டு, டம்ளர் வாங்குவது வரை அனைத்து ஆரம்பச் செலவுகளையும் தலைமை ஆசிரியர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பி அழுத்தம் கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பணம் ஒதுக்க மனமில்லையா?

முதல்-அமைச்சர் அலுவலகத்தைத் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ரூ.6 கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து ஆடம்பரம் செய்யும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், உபகரணங்களுக்கும் பணம் ஒதுக்க மனமில்லையா? குழந்தைகள், மாணவர்கள் மீது அக்கறை இல்லையா? மக்கள் மீது அக்கறை இல்லையா? ஆட்சி மேலிடத்தின் சுய விளம்பரங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் நிதியை வாரி வழங்கும் தவெக அரசு, கல்வி நிலையங்களின் அடிப்படை உள்கட்டமைப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது என்ன மாதிரியான நிதி மேலாண்மை?

திரும்பப் பெற வேண்டும்

ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வி புகட்டும் வழிகாட்டிகளே அன்றி, அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நிதியமைப்புகள் அல்ல. எனவே, தலைமை ஆசிரியர்களைச் சொந்த நிதியைச் செலவழிக்க நிர்ப்பந்திக்கும் இந்த எதேச்சதிகார உத்தரவுகளைப் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கான முழு நிதியையும் அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கி, ஆசிரியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com